Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

விடியபோகிறது ஈழம்...


விடியல்களின் வெளிச்சத்தில் விலாசம் தேடி
விரைந்து கொண்டேயிருக்கிறது
எங்கள் பயணம் !
இமைகளின் இடுக்கில்
இழைகிற சோம்பலில்
கருகப் பார்க்கிறது
எங்கள் கனவு !

இடர்கள் மிகுந்துவிட்ட இருட்டுப் பயணத்தில்
இன்னும் வளரத் துவங்கவில்லை
எங்கள் நம்பிக்கை ஒளி !

வெற்றியை நோக்கிய
வெறி கொண்ட ஓட்டத்தில்
இனி ஓயப்போவதில்லை
எங்கள் பாதங்கள்
உலகை மறந்துவிட்ட
உழைப்பின் உச்சத்தில்
சிதறத்தான் போகிறது
எங்கள் இலக்கு !

வியர்வையின் குளியலில்
முயற்சியின் முடியலில்
விடியத்தான் போகிறது
எங்கள் ஈழம் ..!

ஈழத்து வலி...


இரமேஸ்வரத்தில் எல்லோரும் குளித்து கரை ஏறுகிறார்கள்
நாங்கள் குதித்து கரை ஏறுகிறோம்
...

பிறந்த குழந்தைய்ன் நெற்றியில் வைக்கிறாள்
பிடி
மண்ணாய் கொண்டு வந்த தாய் மண்
...

கடல் கடந்து பார்க்க வந்ந்திருக்கின்றன

சோறு வைத்த காக்கைகள்
...

படகில் ஏறினோம் படகை விற்று
ஆழிப் பேரலைகளும் எங்கள் பெண்களை

வீடு புகுந்து இழுத்து போய் கொல்லத்தான்
செய்தன
ஆனாலும்
இலங்கை வானொலியில் இருந்து
நீங்கள்
பிறந்த நாள் வாழ்த்து கேட்கிறீர்கள்
நாங்கள் மரண அறிவித்தல் கேட்கிறோம்
...

முகாமிற்கு அருகில் உள்ள பள்ளியில் இருந்து கேட்கிறாது
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

-
இப்படிக்கு வலிகளுடன் உங்கள் சொந்தங்கள்...

சிறகிருக்கு…வானமில்லை!


சிறகிருக்கு
வானமில்லை._ இதை
சிந்திக்க எவருக்கும்
ஞானமில்லை!

உயிரிருக்கு…
உறவில்லை._ இதை
உணரதான்
உலகில்லை!

பசியிருக்கு…
கஞ்சியில்ல…_ இந்த
பவத்த…
எங்கு சொல்ல!

சின்னக் கூடாரமே
எல்லையாட்சு._இங்கே
சிங்கள முள்வேலி
தொல்லையாட்சு!

சிறகிருக்கு…
வானமில்லை._இதை
சிந்திக்க எவருக்கும்
ஞானமில்லை!!

( மூச்சு விட அனுமதிக்கும் … முள்வேலிக்குள்… நம்முறவு.)

தருணங்கள்…


ஒரே தெருவில் வாழ்ந்த எங்களை
உலகெல்லாம்…
இறைத்து வைத்திருக்கிறது,
காலம்!.

எங்களின்,
சிறுவயது வாழ்க்கை…
சிரித்தப்படி… கதைத்தப்படி
அமையாது போக,
அப்பா, அம்மாவின்
கைவிரல் பிடித்து
கரையேறிவிட்டோம்…
ஏதும் அறியாது!

இன்று,
கைக்கு எட்டிவிட்ட
எந்த பிரமாண்டங்களிலும்
மனம் ஒப்ப மறுக்கிறது!

எங்கள் மண்ணில்
எங்களின் விடுதலைக் காற்றை
நுரையீரல் முழுதும் நிரப்பி
நுகரதான்… ஏங்குகிறது!

எங்கள்,
சிறுவயதுக்கு விலங்கிட்டு
உரிமை மறுத்த
அதே மண்ணில்,
எம் பிள்ளைகள் ஒன்றாய்
சிரித்தபடியும்…
கதைத்தபடியும்
செல்லுமந்த
செம்மார்ந்த தருணங்களை
என்வீட்டின் திண்ணையிலிருந்து
இறுமார்ந்து காண வேணும்
இதற்கான அமைவு வேணும்...

குண்டுச் செய்!


இன விடுதலைக்கெதிராய்
போராயுதங்கள் தந்த
புண்ணியவான்களே!

போர்முடிந்தது -அங்கே
பொழுது விடிந்ததா?

மண்ணையுண்டு காற்றைவிழுங்கி
மனிதன் வாழ வழியுண்டா?
எங்கள் துயரை எடுத்துரைக்க
எங்கேனும் மொழியுண்டா?

முள்வேலி நரகத்தில்
மூச்சு திணருது,
மூன்று லட்ச உயிர்களென
எந்த நாடு உணருது!!

ஓ…நாட்டாமை நாடுகளே!
இருக்கும் உயிரை…
காப்பாற்ற தொண்டுச்செய்!
இல்லயேல்…
எல்லா உயிருக்குமென
ஒரே ஒரு “குண்டுச் செய்”!