நீயில்லாத வாழ்க்கையா?

கடலலைகள் நம் பெயரை அழித்ததையே
என் மனம் ஏற்க மறுக்கும்-இனி
எங்கனம் உன்னை மறக்கும்

கைகோர்த்து சென்ற இடமெல்லாம்
உன்னை கேட்டு நச்சரிக்கும்-இனி
கண்ணீர் மட்டுமே பதில்களை உச்சரிக்கும்

நித்தமும் புதிதாய் மலர்ந்ததை கண்டு
கோபம் கொண்ட பொறாமை மலர்களும்
என்னை கேலி செய்யும்-இனி
என்ன சொல்லி நான் ஜெயிக்க இயலும்

வழக்கமாய் அமரும் பூங்காவின் இருக்கைகளும்
என்னை பாவமாய் பார்க்கும்
நீ தான் காரணம் என சொன்னாலும் நம்பாமல்
நம் பழைய சண்டைகளை நினைவுப்படுத்தி
என் மேல் பழி போடும்

உயிரே
அழகிய மலர்வெளியில்
நெருஞ்சியை விதைத்தது யாரோ?
காலமும் மருந்தாகாத விஷத்தை
நம் காதலில் ஊட்டியதும் யாரோ?

காதலா!
வெற்று மனதில் காதலை நிறைத்து-இன்று
வெறுமையாக்கி விட்டது நீயடா
கண்ணீர் துடைப்பவனே-என்
கண்ணீருக்கு காரணமானதும் ஏனடா

மழை நீருடனும் கடல் நீருடனும்
கனவிலும் நினைவிலும்
வழியும் விழிநீரை
உன்னையன்றி யாரறிவார்

பூகம்பம் வந்தது போலும்
பிரளயம் கண்டது போலும்
என் மனம் சிதறி வெடித்தால்
நான் கண்ட சேதத்தை
எதை கொண்டு அளப்பாய்

காகிதத்தில் வடித்ததை எளிதில் எரிப்பாய்
என் இதய கல்வெட்டில் செதுக்கியதை
எவ்வாறு அழிப்பாய்

காதல் என்னும் சொர்க்கத்தில்
நான் கழித்த நாட்களையும்
பிரிவென்னும் துயர நரகில்
நான் தொலைத்த சந்தோஷத்தையும்
எப்படி மீட்டு தருவாய்

எல்லாம் இருந்தும் நீயில்லை
எல்லாரும் சூழ்ந்த போதும்-உன்
இடத்தை நிரப்ப ஆளில்லை

நகரும் நரக நாட்களிலும்
வதைக்கும் தனிமை இரவுகளுடனும்
சுட்டெரிக்கும் நிலவுடனும்
கலகம் செய்யும் தென்றலுடனும்
கானல் நீராய் போன உன்னை நினைத்து நினைத்து
என் உயிரும் மெல்ல மெல்ல மறைகிறது

No comments:

Post a Comment