சென்னை மாநகர பேருந்தில் நாம் நித்தமும் சந்திக்கும் அனுபவங்களின் தொகுப்பு...

சென்னைவாசிகளின் பூர்வ ஜென்ம பலனோ என்னவோ தெரியவில்லை. மணிக்கணக்கில் பேருந்துக்காக காத்திருந்தால் ஒன்று கூட வந்து தொலைக்காது. திடீரென ஒரே எண் உள்ள பேருந்துகள் அடுத்தடுத்து வரும். வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வரும்.. "லேட் ஆக்கிகிட்டே போறீங்க இல்ல. இருக்கட்டும். இந்த போக்குவரத்து துறை அமைச்சருக்கு போனு போட்டு ஒரு ஆட்டு ஆட்டுனாதான் இந்த சூனா பானா யாருன்னு தெரியும்".

ஆண்கள், பெண்கள் என சென்னை பேருந்துகளில் எழுதுவதை நிறுத்தினால் தேவலை. இளைஞர்களும், பள்ளி சிறுவர்களும் சில இம்சை பயணிகளிடம் படும் பாடு இருக்கிறதே. அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். மணிக்கணக்கில் காத்திருந்து பேருந்து வந்ததும் இருக்கையில் அடித்து பிடித்து இடம் பிடிப்பேன். உட்கார்ந்த அடுத்த சில நிமிடங்களில் எங்கிருந்தாவது ஒரு நடுத்தர வயது பெண் வருவார். கூட ஒரு பெண்ணையும் அழைத்து கொண்டு. அல்லது ஒரு நடுத்தர வயது ஆண் வருவார். மனைவியை அழைத்து கொண்டு. அவர்கள் என்னிடம் சொல்வது "தம்பி வேற எங்கயாவது உக்காருப்பா. நாங்க ஒண்ணா உக்காரணும்". திரும்பி பார்ப்பேன். பெண்கள் இருக்கை காலியாகத்தான் இருக்கும். ஆனாலும் அங்கு அமர மாட்டார்கள். சரி போகட்டும் என்று வேறு எங்காவது ஆண்கள் இருக்கையில் ஜன்னலோர இருக்கையில் அல்ல) அமர்ந்தால் அன்று இருக்குது எனக்கு தீபாவளி.

கூட்டம் சேர சேர நம் தோள்பட்டையில் தன் புட்டத்தை வைத்து சொகுசாக பயணிப்பார்..நின்று கொண்டு வரும் சக பிரயாணி. "இந்த பைய கொஞ்சம் வச்சிகங்க" என்று பல கிலோ எடையுள்ள சுமையை தொடையில் இறக்குவார் அடுத்த நண்பர். ஒரு வழியாக அந்த நெரிசலில் "எட்டணா அமுக்கி" நடத்துனரிடம் டிக்கெட் வாங்கியதும்தான் நிம்மதி வரும். முன்பெல்லாம் எட்டணா இல்லையென சொல்லும் நடத்துனர்கள், இப்போது அதையும் சொல்வதில்லை. நடத்துங்கள் நடத்துனர்களே. வயதில் பெரியவர்களை கூட ஏதோ அடிமைகளுடன் பேசுவது போல "அங்க போய் உக்காரு. சீக்கிரம் ஏறு, இறங்கு. உள்ள போ" என நடத்துனர்கள் ஏக வசனத்தில் பேசுவதை எப்போதுதான் நிறுத்தப் போகிறார்களோ?

மாநகர பேருந்துகளில், அரசு பள்ளி மாணவ மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகள் சொல்லி மாளாது. முதுகில் டன் கணக்கில் புத்தகங்களை சுமந்து கொண்டு கூட்டம் நிறைந்த பேருந்தில் அந்த பிள்ளைகள் ஏறினால்.. அவர்கள் மேல் ஏன் இப்படி எரிந்து விழுகிறார்கள் நம் மக்கள். 'பையை வச்சி இடிக்காத. நவுந்து நில்லு" என கடிந்து கொள்பவர்கள் வீட்டில் பிள்ளைகள் இருக்கிறதா.. இல்லையா தெரியவில்லை. நேற்று கூட தி. நகர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு காட்சி கண்டேன். அரசு பள்ளியில் பயிலும் ஒரு சிறுமி ஓட்டுனரிடம் 'அண்ணா, இந்த வண்டி பாரிமுனை போகுமா" என கேட்க அதற்கு அவர்.. மன்னிக்கவும் அவன் அந்த சிறுமியிடம் கடிந்து கொண்டு சொல்கிறான் "காலைலா சாப்டியா இல்லியா. கத்தி பேசு". பாவம் அந்த தங்கையின் முகம் சுருங்கிப்போனது. அரசு பள்ளி பிள்ளைகள் என்றால் அப்படி என்ன இளக்காரம் இவர்களுக்கு. அரசாங்கம் இப்பள்ளிகளில் பயிலும் சிறார்களுக்கு தனியாக பேருந்து விட்டால்தான் இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி. வறுமையின் நிறத்தை முகத்தில் அடர்த்தியாக பூசியபடி பள்ளிக்கு செல்லும் நம் பிள்ளைகள், இப்படி அவஸ்தை படுவதை சகிக்க முடியவில்லை.



இப்படிப்பட்ட மிருகங்களுக்கு மத்தியிலும் எங்காவது ஒரு நல்ல நடத்துனரோ, ஒட்டுனாரோ இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாள் பேருந்தில் நான் கண்ட காட்சி. பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தின் படியில் பயணம் செய்து கொண்டு வந்தனர். அதை ஒரு பயணி காரமாக கண்டித்தார். உடனே அங்கு வந்த நடத்துனர், "பசங்கள திட்டாதீங்க சார். தன்மையா சொன்னா கேட்டுக்க போறாங்க. அவங்களுக்கு என்ன தெரியும். படிக்க சொன்னா படிப்பாங்க. வெளையாடுவாங்க. தம்பி மேல வாங்கப்பா" என அழைத்ததும் அவர்கள் அனைவரும் மேலே ஏறினர். முன் வரிசையில் அமரும் பள்ளி பிள்ளைகளிடம் அன்பாக பேசிக்கொண்டே வரும் ஓட்டுனர்களும் அரிதாக தென்படுவதுண்டு.


எதற்கெடுத்தாலும், பேருந்துகளில் தொங்கி கொண்டு வரும் இளைஞர்களை வசவு பாடும் மகாஜனங்களே, கூட்டம் அதிகம் உள்ள பேருந்துகளில் அவர்கள் வெளியே தொங்குவதால்தான் உள்ளே நீங்கள் மூச்சாவது விட முடிகிறது. அவர்களும் உள்ளே வந்து அடைத்துக்கொண்டு நின்றால் உங்கள் நிலை? பொம்பளைங்க மேல வந்து விழுகிறான் என்று புராணம் வாசிப்பீர்கள். எனக்கு தெரிந்து, இளைஞர்களை விட பெரும்பாலும் பெருசுகள்தான் பெண்களை உரசுகின்றன. தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்கினால் அவன் ஏன் தொங்க போகிறான்.

நானும் ரொம்ப நாட்களாக பார்க்கிறேன், அது என்ன A/C பேருந்தில் செல்லும் சில குபேரர்கள், சாதாரண பேருந்தில் செல்லும் பயணிகளை சற்று அலட்சியமாக பார்ப்பது. அவர்கள் எல்லாம் பில் கேட்ஸ் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் போல முகத்தை வைத்து கொள்வது ரொம்பதான் ஓவர். நம் மக்கள் பொதுவாக பல நிமிடம் ஒரு பேருந்தில் அமர்ந்து அது கிளம்பும் நேரத்தில், திடீரென மற்றொரு பேருந்து அருகில் வந்தால் உடனே அங்கே தாவுவதும், பிறகு அது கிளம்ப நேரம் ஆகும் என தெரிந்ததும், முதலில் அமர்ந்த வண்டிக்கே ஓடி வருவதும்... ஏக ரகளையாக இருக்கும். மனித மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த ரங்கநாதன் தெருவில்.. உச்சி வெயிலில் கூட சென்னையின் பல பகுதிகள் இருந்து வந்து சரவணா ஸ்டோர்ஸ் பைகளுடன் தியாகராய நகர் பேருந்து நிறுத்தத்தில் குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டே இருக்கிறார்கள் நம் சனங்கள். தயவு செய்து சென்னை முழுதும் பல கிளைகளை சரவணா ஸ்டோர்ஸ் திறந்து வைத்தால், தி.நகர் சற்று இளைப்பாறும்.

சமீப காலமாக மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. படியில் தொங்குதல், இளம் பெண்களை கிண்டல் செய்தல், இந்த வயதிலேயே மாமா, மச்சான் என பேசுதல் போன்றவை.... பேருந்தில் இவர்கள் செய்யும் அருவக்கதக்க செயல்கள் கல்லூரி மாணவர்களின் செயல்களையே மிஞ்சும் அளவிற்கு இருக்கின்றன. இன்றைய இளைய சமூகம் சரியான பாதையில்தான் பயணித்துக்கொண்டு இருக்கிறதா? பள்ளி நிர்வாகம்,அரசு மற்றும் பெற்றோர்கள் இதுபற்றி சிந்திப்பதே இல்லையா?


விஷம்போல் ஏறும் விலைவாசியில் ஏற்கனவே திண்டாடிக்கொண்டு இருக்கும் ஏழை, நடுத்தர மக்களின் உயிர்நாடியாக விளங்கும் பேருந்துகள் தாழ்தளம்,சொகுசு,சிறப்பு என பல ரூபங்களில் வந்தாலும் மக்கள் எதிர்பார்ப்பது, சாதாரண வசதியுடன், குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் பேருந்துகளைத்தான் என்பதே உண்மை. பேருந்தில் டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளும் அமர வசதி செய்து தராமல், மூட்டை மூட்டையாக மக்களை உள்ளே அடைத்து செல்லும் செயல் எப்படி தர்மமாகும். சொகுசு பேருந்துகளிலும் இதே கதிதான். சென்னை போன்ற பெரு நகரங்களில் இது நடக்காத காரியம் என்பதெல்லாம் சரியான விவாதம் ஆகாது. இன்னும் எத்தனை வருடங்கள்தான் வயதானவர்களும், இளம் பெண்களும் இப்படி நின்று கொண்டே பயணிக்க முடியும். சென்னை நகர்வாழ் மக்களின் அடிப்படை தேவைகளில் இதுவும் ஒன்று என்பதை எப்படி மறுக்க முடியும். மொத்தத்தில் என் மனதில் பட்டதை இங்கு பதிவு செய்து இருக்கிறேன். உங்கள் பயணமும் நல்லபடி அமைய வாழ்த்துகள். மீண்டும் பயணிப்போம். நன்றி.

No comments:

Post a Comment