Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

"நீ" என்றாலே சுகம்தான்...!


நினைவுகளும் சுகம்தான் ... - அது
"உன்னுடையதாக" இருந்தால்...

கனவுகளும் சுகம்தான் ... - அதில்

கைப்பிடித்து "நீ" நடந்தால்...

அழுவதும் சுகம்தான் ... - அங்கே

ஆறுதல் கூற "நீ" இருந்தால் ...

தடுக்கி விழவும் சுகம்தான் ... - அங்கே

தாங்கிப் பிடிக்க "நீ" இருந்தால்...

தள்ளாடும் வயதும் சுகம்தான்... - அங்கே

கைத்தடியாய் "நீ" இருந்தால் ...

மரணமும் சுகம்தான் ... - அது

"உன்" மடியிலேன்றால் ....

இப்படிக்கு
உயிரை (உன்னை) நேரில் பார்த்தவன்

கற்றுக்கொடுத்தாள் . . .

அழுவதற்கு கற்றுக்கொடுத்தாள்
ஒரு நாளும் அழவிட்டதில்லை

கோபிக்க கற்றுக்கொடுத்தாள்
ஒருநாளும் கோபமூட்டியதில்லை

காதலிக்க கற்றுக்கொடுத்தாள்
யாரையும் காதலிக்கவிட்டதில்லை

இப்படி என்னை பாதி செதுக்கிகொண்டிருக்கும்போதே
பிரிந்து சென்றுவிட்டாள்
பிரிவை கற்றுக்கொடுகாமலே . . .

நீயில்லாத வாழ்க்கையா?

கடலலைகள் நம் பெயரை அழித்ததையே
என் மனம் ஏற்க மறுக்கும்-இனி
எங்கனம் உன்னை மறக்கும்

கைகோர்த்து சென்ற இடமெல்லாம்
உன்னை கேட்டு நச்சரிக்கும்-இனி
கண்ணீர் மட்டுமே பதில்களை உச்சரிக்கும்

நித்தமும் புதிதாய் மலர்ந்ததை கண்டு
கோபம் கொண்ட பொறாமை மலர்களும்
என்னை கேலி செய்யும்-இனி
என்ன சொல்லி நான் ஜெயிக்க இயலும்

வழக்கமாய் அமரும் பூங்காவின் இருக்கைகளும்
என்னை பாவமாய் பார்க்கும்
நீ தான் காரணம் என சொன்னாலும் நம்பாமல்
நம் பழைய சண்டைகளை நினைவுப்படுத்தி
என் மேல் பழி போடும்

உயிரே
அழகிய மலர்வெளியில்
நெருஞ்சியை விதைத்தது யாரோ?
காலமும் மருந்தாகாத விஷத்தை
நம் காதலில் ஊட்டியதும் யாரோ?

காதலா!
வெற்று மனதில் காதலை நிறைத்து-இன்று
வெறுமையாக்கி விட்டது நீயடா
கண்ணீர் துடைப்பவனே-என்
கண்ணீருக்கு காரணமானதும் ஏனடா

மழை நீருடனும் கடல் நீருடனும்
கனவிலும் நினைவிலும்
வழியும் விழிநீரை
உன்னையன்றி யாரறிவார்

பூகம்பம் வந்தது போலும்
பிரளயம் கண்டது போலும்
என் மனம் சிதறி வெடித்தால்
நான் கண்ட சேதத்தை
எதை கொண்டு அளப்பாய்

காகிதத்தில் வடித்ததை எளிதில் எரிப்பாய்
என் இதய கல்வெட்டில் செதுக்கியதை
எவ்வாறு அழிப்பாய்

காதல் என்னும் சொர்க்கத்தில்
நான் கழித்த நாட்களையும்
பிரிவென்னும் துயர நரகில்
நான் தொலைத்த சந்தோஷத்தையும்
எப்படி மீட்டு தருவாய்

எல்லாம் இருந்தும் நீயில்லை
எல்லாரும் சூழ்ந்த போதும்-உன்
இடத்தை நிரப்ப ஆளில்லை

நகரும் நரக நாட்களிலும்
வதைக்கும் தனிமை இரவுகளுடனும்
சுட்டெரிக்கும் நிலவுடனும்
கலகம் செய்யும் தென்றலுடனும்
கானல் நீராய் போன உன்னை நினைத்து நினைத்து
என் உயிரும் மெல்ல மெல்ல மறைகிறது

என் காதலி

நினைக்கும் பொழுதிகளில்
கண்முன் தோன்றி
தவிக்கும் பொழுதுகளில்
தலை தடவி
ஆறுதல் சொல்லி
பாசம் என்னும்
செடியை வளர்த்து
சொந்தம் என்னும்
உறவை கொடுத்து
இன்பம் என்னும்
உணர்வை கொடுத்து
உயிரிலும் மேலான
நட்பைக் கொடுத்து
நட்சத்திரமாக
பிரகாசிக்கும் தோழியே
நீ வேண்டும் என்
வாழ்வின் எல்லை வரை...

காதலின் ரகசியத்தை ரசமேடுத்து ரகசியமாய் எனக்களித்த என்னவளே...

காதலின் ரகசியத்தை
ரசமேடுத்து ரகசியமாய்
எனக்களித்த என்னவளே
யோகத்தின் சூத்திரத்தை
போகத்தின் பாத்திரத்தில்
தாரை வார்த்து தந்தவளே
வாதத்தின் வாளெடுத்து
வாழ்க்கையில் விளகேற்றி
வழிகாட்டி நின்றவளே
தாபத்தில் தோள் கொடுத்து
தடுமாறும் எனை தடுத்து
தாங்கியே வந்தவளே
மோகத்தில் மோத வைத்து
முகம் பார்த்து மனம் கோர்த்து - என்
மூர்கத்தில் தெளிந்தவளே
தியாகத்தில் தலைநிமிர்ந்து
சோகத்தை தனுள் ஈர்த்து
யாகத்தை வளர்த்தவளே
காமத்தில் கலை வளர்த்து
ஜாமத்தில் எனை வளைத்து
யாவும் தான் என்றவளே
என்னுளே வந்தவளே
எனையாள இன்பமடி
எந்நாளும் எந்நாளும்
விடியல் இல்லா இரவு
வடிகால் இல்லா உணர்வு
கனவான எந்தன் கனவு
நினைவுகளே அதன் வரவு
கண்ணிரே நிதம் செலவு
ஏக்கத்தின் மொத்த விளைவு
இன்பத்தின் இறுதி முடிவு
தனிமையின் தாளா தவிப்பு
துயரத்தின் விடைபெறா உறவு
களையிழந்த எந்தன் நினைவு
நிஜமாக்கும் உந்தன் பிரிவு
விழியால் வந்த சோகம்
அழியா நித்ய கோலம்
நினைவால் தினமும் யாகம்
புரியா இதய வேதம்
கனவால் என்றும் வாழும்
விடியா இரவு காலம்
இழையாய் தென்றல் விசும்
இனிய பழைய பாரம்
தினமும் தூது போகும்
நினைவின் மாய ஜாலம்
மனத்தால் ஏற்றும் திபம்
அணையா எனது தாபம்
உணர்வால் கலைந்த மேகம்
இடியாய் இடித்து மேலும்
மின்னல் துளைத்து பொழியும்
மழையாய் விழியை மீறும்
துடியாய் துடித்த இதயம்
அலையாய் அடித்து மடியும்
வெடியாய் வெடித்த பிரிவும்
விளங்கா நிஜத்தில் உழலும்
நிழலாய் கணமும் தொடரும்
வலியாய் அரிக்கும் நினைவும்
மலராய் விரிந்த போதும்
மணத்தை {மனதை} பறித்தாய் நீயும்
உயிரால் வாழ்ந்த போதும்
நிழலாய் வாழ்வும், சாவும்
இது தான் எந்தன் ராகம்
யார்தான் மீட்டக்{மீட்கக்} கூடும்

காதலர்தின சிறப்பு ராசிபலன்கள்...

மேஷம் Aries

இன்னும் யாரையும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லையா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி; விரைவில் உங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள ஒருவர் வரப்போகிறார்.

ஏற்கனவே காதலித்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இனிமேல் சோதனைதான்! விரைவில் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்.

ரிஷபம் Taurus

இந்த ராசிக்காரக் காதலர்களுக்கு விரைவில் ஒரு பெரிய கோஷ்டியுடன் எங்காவது ஒரு பார்க்கிலோ, பீச்சிலோ நிறைய காஸ்ட்யூம்களை மாற்றிக்கொண்டு டூயட் பாட ஒரு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது. உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர்களின் பாடல்களில் ஒன்றை மனப்பாடம் செய்து கொள்வது நலம் பயக்கும்! குத்துப்பாட்டெல்லாம் நல்லா டான்ஸ் ஆடத்தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான்! பல ரோடுகள் சேதமடைந்திருப்பதால், கல்லுக்கு எங்கும் பஞ்சமில்லை.

இதுவரை காதலிக்காதவர்களுக்கு! சுக்கிரனின் பார்வை இப்போது உங்கள் மீது விழுந்திருப்பதால், விரைவில் டவுண் பஸ், ஷேர்-ஆட்டோ, ரயில் பயணங்களின்போதோ, ஸ்பென்ஸர்ஸ், அண்ணா நகர், திருவான்மியூர் போன்ற சிக்னல்களிலோ உங்களது எதிர்காலத் துணையை சந்திக்கிற வாய்ப்பு ஏற்படப்போகிறது. (கவனம்: ஐயா, சாமீ தர்மம் பண்ணுங்க என்று வருகிறவர்கள் இதில் அடங்கமாட்டார்கள்!)

மிதுனம் Gemini

’காதலாவது கத்திரிக்காயாவது,’ என்று மார்னிங் ஷோ சினிமா பார்த்தோமா, சரவணபவனில் மினிமீல்ஸ் சாப்பிட்டோமா, ஒன்-ட்வென்ட்டி பான் மென்றோமா என்று இருந்த உங்களுக்கு சனிதசை தொடங்கியிருப்பதால், விரைவில் காதல்வயப்பட்டு கவிழ்த்துப்போட்ட கரப்பான்பூச்சி மாதிரி கஷ்டப்படப் போகிறீர்கள். உங்கள் தசாபலன்களின்படி இந்த கண்டத்திலிருந்து தப்பிப்பது கடினம் என்றாலும், சில நாட்களுக்கு கைபேசி,கணினி போன்ற அனுகூலசத்ருக்களிடமிருந்து விலகியிருந்தால், சனியின் உக்கிரம் சற்றுக் குறைய வாய்ப்பிருக்கிறது; அதாவது பாதிப்பு சற்று தாமதிக்கலாம்.

ஒரேயடியாக மீள்வதற்கு வழியில்லையா என்று கேட்பவர்களுக்கு: ’உடனே திருமணம் செய்து கொண்டு விடுவோம்,’ என்று சொன்னால் மலைபோல வரும் துன்பம் பனிபோல போக வாய்ப்பிருக்கிறது.

கடகம் Cancer

சும்மா சொல்லக்கூடாது. உங்க ராசிப்படி உங்கள் வாழ்க்கைத்துணையை உங்க வீட்டிலேயே பார்த்து முடிவு பண்ணி விடுவார்கள் என்பதால் நிறைய அலைச்சல், செலவு, உளைச்சல் மிச்சமாகும். அதற்கெல்லாம் சேர்த்துவைத்து திருமணத்திற்குப் பிறகு மூன்றும் சேர்ந்து மும்முனைத் தாக்குதல் நடத்தும்.

சிம்மம் Leo

இந்த ராசிக்காரர்கள் எல்லா கிரெடிட் கார்டு பாக்கியையும் விரைவில் அடைத்து விடுவார்கள் என்பதால், புதுக்கார்டுகள், புதுக்கடன், புதுக்காதல் எல்லாம் கைகூடுகிற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சூட்டோடு சூடாக, கடன் தலைக்கு மேல் மீண்டும் போவதற்கு முன்னர், திருமணத்தை முடித்துக்கொள்வது உசிதம்.

கன்னி Virgo

’தெரியாத்தனமாகக் காதலித்துத் தொலைத்துவிட்டோமே, இதெல்லாம் நமக்குத் தேவையா என்று தலையில் மடேர் மடேர் என்று அடித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள். இவ்வளவு நாட்கள் இடைவிடாத சண்டையும் சச்சரவுமாக காதலித்துவிட்டதால், போனால் போகிறது என்று இனி திருமணம் செய்து கொண்டு விடலாம். இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்காதவர்களுக்கு பூர்வஜென்ம தொடர்புகள் ஏற்படுகிற வாய்ப்புகள் இருப்பதால், மலைப்பிரதேசங்களுக்குப் போக வேண்டிய பல வாய்ப்புகள் ஏற்படலாம். (கு..றிஞ்சி மலர் மலையில் தானே பூக்கும்!)

துலாம் Libra

இந்த ராசிக்காரர்கள் அனேகமாக அவரவர் பட்ஜெட்டுக்குத் தகுந்தவாறு மண்டபத்தைத் தேடிக்கொண்டிருப்பார்கள் என்பது உறுதி. விரைவில் டும்டும் கொட்டப்போகிறது என்பதால், ப்ரிவிலேஜ் லீவ், லோன் ஆகியவற்றிற்கான ஊத்தப்பங்களை, மன்னிக்கவும், விண்ணப்பங்களை தயார் செய்து கொள்ளவும். தன்னந்தனியாக இருப்பவர்களே! திரும்பிப் பாருங்கள் - வில்லங்கம் விரைவு வண்டியிலே வந்திட்டிருக்கு!

விருச்சிகம் Scorpio

இதுவரைக்கும் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட காப்பாற்றாத காதலர்கள் இனிமேல் புதிய வாக்குறுதிகளை அளித்து விடுவார்கள். காதலுக்கு தைரியமும் திராணியும் மிக அவசியம். எனவே, யாரையாவது பார்த்து காதல் வந்தால், தைரியமாகச் சொல்லிவிடுங்கள். பிரச்சினை வந்தால், இருக்கவே இருக்கிறது திராணி! திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுங்கள்!

தனுசு Sagittarius

இதுவரை சதா சண்டை,சச்சரவு,கோபம் என்றிருந்த காதலர்களுக்கு, இனிமேல் அதுவே பழகிப்போய் விடும். ஆகையால் இனிமேல் ஒருநாள் சண்டை போடாவிட்டாலும், மனம் பதைபதைத்து "உடம்புக்கு ஒண்ணுமில்லையே?" என்று அக்கறையோடு விசாரிப்பீர்கள்.

உங்களது கனவுக்கன்னி அல்லது கனவுக்காதலன் எப்படியிருக்க வேண்டும் என்று கற்பனை செய்பவர்கள், மறந்து விடுவதற்கு முன்னர் எழுதிவைத்துக்கொண்டு தேடுதல் நன்மை பயக்கும்.

மகரம் Capricorn

பன்னிரெண்டு ராசிகளிலும் காதலர்களுக்கு மிகவும் மோதகமான, அதாவது சாதகமான ராசி இது தான். உங்கள் காதலைப் பற்றி வீட்டில் யாராவது போட்டுக்கொடுத்து விடுவார்கள் என்பதால் இனிமேல் பயமின்றி சந்திக்கலாம். இதுவரை காதலிக்காதவர்களிடம் யாராவது வந்து அசடுவழிந்து அகமகிழச்செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

கும்பம் Aquarius

இந்த ராசிக்காரக் காதலர்கள் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு ரகம். ஒன்று தங்களுக்குள்ளே ஏற்பட்ட மனக்கசப்புகளையெல்லாம் ஒரு மசால்தோசை சாப்பிட்டுவிட்டு மறந்துவிடுவார்கள். இல்லாவிட்டால், ஆளுக்கு ஒரு கப் அருகம்புல் ஜூஸ் குடித்துவிட்டு ஆளை விடு சாமீ என்று போய்விடுவார்கள். இதுவரை காதலிக்காதவர்கள், எப்போது சினிமாவுக்குப் போனாலும் ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் எடுப்பது நல்லது. குருட்டாம்போக்கில் ஜோடி சேர்ந்தாலும் சேரும்.

மீனம் Pisces

இந்த ராசிக்காரர்களிடம் கோடம்பாக்கம் போக வழிகேட்டால், பதில் சொல்வதற்குள்ளாக நீங்கள் கோயம்புத்தூருக்கே போய்வந்து விடலாம். ஆனால், திடீரென்று லெட்டர்-பேட் கட்சிகள் தேர்தல் நேரத்தில் அடைவது போன்ற சுறுசுறுப்பை இவர்கள் அடையவும் வாய்ப்பிருக்கிறது. எனவே காதலில் ஒரு லிரில் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் ஏற்படும். புதிதாகக் காதலிக்க விரும்புகிறவர்கள் யுவன் சங்கர் ராஜா பாடல்களை தினமும் குளித்துவிட்டுப் பாராயணம் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

அனைத்து ராசிக்காரர்களுக்கும்:

ராசியான நிறம்: சிவப்பு
ராசியான உடை: முக்காடு
ராசியான எண்கள்: 'பிஸி’ யாக இல்லாத எல்லா எண்களும்.

நனையலாம்...


உன்
முந்தானையில்
தலை துவட்டுவதற்க்காக
எத்தனை முறை
வேண்டுமானாலும்
நனையலாம்
மழையில்...