ஒரு வேளை புலிகளால் ராஜீவ் காந்தி கொல்லப்படவில்லை என்றால் மத்திய அரசு (காங்கிரஸ் கட்சி) கடைசி வரை ஈழ தமிழர்களுக்கு-அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக இருந்திருக்கும் என்று யாராவது கூறினால் அதை நினைத்து பரிதாப்படுகிறேன்.
ஆனால், ராஜீவின் கொலை பல்வேறு வழிகளில் தமிழர்களின் உரிமை போராட்டத்தை முடக்க ஒரு காரணமாக இருந்துவந்துள்ளது. அதுமட்டுமல்லாது இதை காரணமாக வைத்து இலட்சகணக்கான அப்பாவி தமிழ் மக்கள் பழி வாங்கப்பட்டுள்ளார்கள். இவ்வளவு வன்மமும் சம்மந்தப்பட்ட தரப்புக்கு போதாதா?
1991 ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புத்தூரின் நடந்த தற்கொலை தாக்குதலில் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார். தற்கொலை சூத்திரதாரி தனு என்ற பெண்! இந்த பெண்ணுக்கு எங்கிருந்து இந்த வைராக்கியம்? "இந்திய அமைதிகாக்கும் படைகளால் தன் இரண்டு சகோதரர்களை இழந்திருந்தார். அதோடு அந்த படைகளால் வன்புணர்வுக்கும் ஆளாகியிருந்தார். அதனால் தான் காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்குள் இருந்துவந்தது" என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முருகன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த தற்கொலை தாக்குதலை வழிநடத்தியவர்களான சிவராசன், சுபா மற்றும் சிலரும் இந்தியாவிலே போலீஸ் மற்றும் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் சயனேட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் பின்னர் இதனுடன் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்ற போர்வையில் பலர் கைது செய்யப்பட்டார்கள். விசாரணைகளின் பின்னர் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி என்ற நால்வர் மீது கடுமையானா குற்றச்சாட்டுக்கள்(!) முன்வைக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினி என்ற பெண்ணுக்கு மாத்திரம் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இதில் கொடுமையான விடயம் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முழுமையாக பூர்த்தி செய்யும் முன்னரே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. அதை தொடர்ந்தும் இருபது வருடங்களாக விசாரணை என்ற பெயரில் எதோ நடந்து வருகிறது.
முக்கியமாக ராஜீவ் காந்தி கொலை புலிகளால் தான் நடத்தப்பட்டது என்பதற்கு கூட இன்னமும் முழுமையான ஆதாரங்கள் விசாரணை செய்யும் தரப்பால் முன்வைக்கப்படவில்லை. அதோடு விசாரணை "புலிகள் தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள்" என்ற கோணத்தில் மட்டுமே இதுவரை நடந்து வந்துள்ளது.ஆனால் இந்த வழக்கிலே அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் ஏராளம்.
முக்கியமான கேள்வி 'ராஜீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அவரின் கட்சி உறுப்பினர்கள் எங்கே போனார்கள்.' அவருக்கு அருகில் இருக்க வேண்டியவர்கள் அந்த நேரத்தில் மாத்திரம் விட்டு தூர விலகியது தற்செயலானதா? என்பது உட்ப்பட பல்வேறு விடை தெரியாத கேள்விகள் தெக்கு நிற்கிறது! அதற்காக இது புலிகளால் செய்யப்படவில்லை என்று நான் உறுதிப்படுத்த வரவில்லை. ஆனால் இதனுடன் சம்மந்தப்பட்ட பல்வேறு தரப்பு திட்டமிட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று குற்றவாளிகள் என்ற பெயரில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவர்கள் அந்த கொலையுடன் எந்த மட்டிலும் நேரடியாக சம்மந்தபடாதவர்கள். முருகனை பொறுத்தவரை நடப்பதை ஏற்கனவே அறிந்திருந்தார் என்பதை விட கொலையில் அவருக்கு வேறு பங்கு இருந்திருக்கவில்லை. ஆனால், மிகுதி இருவரான சாந்தன், பேரறிவாளன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சிறுபிள்ளை தனத்தின் உச்சம்.
எம்மை விட, முப்பது வருடங்களுக்கு மேலாக புலிகளை எதோ ஒருவிதத்தில் பின்தொடரும்-புலனாய்வு செய்துகொண்டிருக்கும் இந்திய புலனாய்வுத்துறைக்கு தெரியும், புலிகள் தங்கள் நடவடிக்கைகளில் எந்த மட்டில் ரகசியம்காப்பார்கள் என்று...
அப்படி இருக்க, கொலை நடக்கபோவது பற்றி அறியாது, பேட்டரி வாங்கி கொடுத்ததுக்கும், அருகில் நின்று கதைத்ததுக்கும் தீர்ப்பு மரண தண்டனையா..!
நிச்சயமாக இந்த தண்டனை என்பது ஆளும் வர்க்கத்தை திருப்திபடுத்த, இல்லை அவர்களின் செய்யும் மட்டமான அரசியலுக்காகவே வழங்கப்பட்டது.
சரி, இவ்வாறான ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்று அறியாது, பேட்டரி வாங்கி கொடுத்தது கொலைக்கு ஒப்பான, மரண தண்டனை வழங்கக்கூடிய அளவுக்கு கொடூரமான குற்றம் என்றால், கொத்து கொத்தாக ஈழத்தில் மக்கள் சாக குண்டுகள் கொடை செய்த அன்னை சோனியா கும்பலுக்கு உச்ச பட்சமாக வழங்கப்பட வேண்டிய தண்டனை என்ன? வழங்குவது யார்??
தண்டனைகள் என்பது குற்றம் செய்தவர்கள் உணர்ந்து திருந்துவதற்காக வழங்கப்படுவது என்பார்களே அது பொய்யா? இருபது வருடங்களாக அவர்கள் அனுபவித்து வந்த நரக வேதனை போதாதா? அவர்களின் உயிரை எடுப்பது தான் தண்டனை என்றால் அதில் இருந்து சம்மந்தப்பட்ட தரப்பு எதிர்பார்ப்பது தான் என்ன!!
இப்போது வேண்டிக்கொள்வது எல்லாம், இந்த மூவரின் மரணதண்டனைக்கு எதிராக அரசியல், கட்சி, பேதம் புறம் தள்ளி ஒன்றுபட்டு போராடுவது தான்.
"அநீதிக்கெதிரான மனம் படைத்தவர்கள் இந்திய அரசுக்கெதிராக குரலெழுப்புங்கள்
With warm regardsManikandan G | 9941488748
http://perarivalan.wordpress.
மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்